நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 20 பேரை மட்டும் வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை துவங்க கடந்த 21-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 20 பேரை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை துவங்க முடியாது, குறைந்தது 50 பேராவது தேவை என்று சின்னத்திரை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக அரசு அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பை துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது,
வணக்கம் முதல்வர் அவர்களுக்கு,
படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள்.
அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.
பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.
சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
முதல்வர் அவர்கள் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.
திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி நன்றி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.