இயக்குனர் பாரதிராஜா |
இந்த நிலையில், இயக்குனர் பாராதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்று உதயமாகி இருக்கிறது. இதுகுறித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
என் இனிய தயாரிப்பாளர்களே...
கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே.
அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்... புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.
தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்.
தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம்.
ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.
கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.
முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.
இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.
ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.
பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.
தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.
இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.
பாரதிராஜா |
நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.
இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம்.
நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது!
பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment
I'd love to hear your thoughts. Be sure to check back again, because i do make every efforts to reply your comments here.